Friday, July 15, 2011
நெஞ்சு வலி இதயம் அடிக்கும் எச்சரிக்கை மணி!!!!!!!!!!
தனது பிரச்சனையை உணர்த்துவதற்காக இதயம் எச்சரிக்கை மணி அடிக்கும். அந்த எச்சரிக்கை மணிதான் நமக்கு இதய வலியாக (நெஞ்சு வலி) பிரதிபலிக்கிறது. நெஞ்சுவலி என்பது நமது மார்பின் நடுப்பகுதியில் உணரப்படுவது. இந்த வலியானது நெஞ்சு எலும்பின் நடுப்பகுதியில் ஏற்படும் என்றாலும் சில சமயங்களில் இடது மேல் கை, கழுத்து, தாடை போன்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும். பலவகையான இன்னலுக்கு ஆளாகும் இதயமானது தனது அவல நிலையை உணர்த்தும் அபயக் குரல்தான் நெஞ்சு வலியாக உருவெடுக்கிறது.
தீவிரமாக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தல், நீண்ட நேரம் நடப்பது, செங்குத்தான மலைப் பகுதியில ஏறுதல், கடுமையான வெப்பம், கடுமையான குளிர், கடுமையான உடல் சோர்வு, கடுமையான இன இறுக்கம், அளவுக்கு அதிகமாகக் கோபம் கொள்ளுதல், வயிறு புடைக்க உணவு சாப்பிடுதல் போன்ற சூழல்களில் நெஞ்சு வலி ஏற்படக்கூடும். இந்த வலி ஏன் ஏற்படுகிறது? இதயம் தனக்குத் தேவையான ரத்தத்தை மகா தமனியின் முதல் நிலைக் கிளைகளான இதயத் தமனிகளிடம் இருந்து பெறுகிறது. இவை, சிறுசிறு கிளைகளாகப் பிரிந்து இதயம் முழுவதும் வலைபோல் படர்ந்துள்ளன. நாம் அன்றாடம் நியாயமான, அளவான வேலைகளைச் செய்யும் போது இதயத் தமனிகள் இதயத் தசைகளுக்குத் தேவையான உயிர்வெளி, ஹார்மோன்கள், ஊட்டச்சத்துகள், உயிர்ச்சத்துகள் ஆகியவற்றை அளிக்கின்றன.
ஆனால் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இதயத்துக்கு வேலை தரும்போது அந்தச் சுமையைச் சமாளிக்க முடியாமல் இதயத் தமனிகள் திணறுகின்றன. இதன் காரணமாக இதயத் தசைகள்போதுமான உயிர்வளிச் சத்துக்களைப் பெற முடியாமல் இதயத்தில் வலி ஏற்படுகிறது. நாம் பிறக்கும்போது தூய்மையாகவும், நன்கு நெகிழும் தன்மையுடையதாகவும் இதயத் தமனிகள் இருக்கின்றன. காலப்போக்கில் இதயத் தமனிகளின் உள் பகுதியில் பலவகையான கொழுப்புப் பொருள்கள் படிந்து தமனிகளின் உள்விட்டமானது கொஞ்சம், கொஞ்சமாக அடைபட்டு குறுகிவிடுகின்றன.
அதோடு, தமனிகள் தங்களின்நெகிழும் தன்மையையும் இழந்து தடித்துவிடுகின்றன. இதனால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபடுவதால் இதய தசைகளில் வலி ஏற்படுகிறது. இதயத்துக்குப் போதுமான ஓய்வு கொடுக்காமல் அளவுக்கு அதிகமாக அதை வருத்துவதால் ஏற்படும் வலி என்றும் இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆரம்ப நிலையில் இதய வலியைக் கண்டறிந்துவிட்டால் எளிதாக அதைச் சமாளித்துவிட முடியும்.ஆனால் இதய வலியைச் சமாளிக்க வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் தேவைப்படும். போதுமான ஓய்வு இல்லாமல் தங்கள் உடலை வருத்திக்கொள்பவர்களும் அடிக்கடி களைப்படைபவர்களும்தான், இதய வலிக்கு அதிகமாக ஆளாகிறார்கள்.எனவே, வலியில் இருந்து தற்காலிகமாக விடுதலை பெற வேண்டும் என்றால் முதல் கட்டமாக முழுமையான ஓய்வு, உடல் அளவிலும், மனதளவிலும் தேவை.
அன்றாட வேலைச் சுமைகளை ஓரளவு குறைத்துக் கொள்வதோடு அல்லாமல் காரணம் இல்லாமல் அடிக்கடி கோபப்படுதல் போன்ற இதய வலியை ஏற்படுத்தக்கூடிய வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொள்வது மிகவும் சிறந்த தற்காப்பு முறையாகும் இதய வலிக்கான சிகிச்சையில் மருந்துகளுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. இதய வலிக்குத் தற்போது பலவகையான மருந்துகள் உள்ளன. பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை, நோயின் தன்மை, இதய வலியின் தன்மை, உடலின் அமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு இதய மருத்துவர் தகுந்த மருந்தைப் பரிந்துரைப்பார். இதய மருந்துகள், குறுகிய இதயத் தமனகளை விரிவடையச் செய்கின்றன. இதன் மூலமாக ரத்தமானது தங்கு தடையில்லாமல் இதயத்துக்கு சென்று இதயத்துக்குத் தேவையான உயிர்வளியையும், சத்துகளையும் அளிக்கத் துணை புரிகின்றன. இதனால் இதய வலியானது தற்காலிகமாக நீங்குகிறது.இதய வலியை ஓரளவு கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகளில் நைட்ரேட் வகை மருந்துகள் பீட்டா பிளாக்கர்ஸ் கால்சியம் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை முக்கியமானவை.
இவற்றில் நைட்ரேட் வகை மருந்துகளை குறுகிய நேரத்தில் செயல்படும் மருந்துகள், நீண்ட நேரம் செயல்படும் மருந்துகள் என இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளனர். இவற்றில் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு வகையான செயல்திறன் கொண்ட மருந்தாக அமைந்திருக்கிறது இதய வலியைப் போக்கும் பலவகையான மருந்துகளை ஒரு நோயாளி போதுமான அளவு தொடர்ந்து பயன்படுத்தியும் தக்க பலன் கிடைக்கவில்லையென்றால் வேறு சில மருத்துவ முறைகளைக் கையாள வேண்டும். இதயத் தமனிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளின் தன்மையை அறிந்து கொள்ள முதலில் ஆஞ்சியோகிராபி செய்யப்பட வேண்டும் இதயத் தமனிகளில் உள்ள அடைப்பின் தன்மை சிறிய அளவில் இருந்தால் ஆஞ்சடியோபிளாஸ்டி முறையின் மூலமாக அடைப்புகள் மிகவும் அதிகமாக இருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்வதுதான் அவற்றை நீக்குவதற்கான நிரந்தர சிகிச்சையாக இருக்க முடியும். இத்தகைய அறுவைச் சிகிச்சையின் மூலம் இதயத்துக்கு நேரிடையாக ரத்த ஓட்டம் கிடைக்கும் இதய வலியால் பாதிக்கப்படுபவர்கள் கீழ்கண்ட தற்காப்பு முறைகளைக் கையாண்டு அது தீவிரமான நிலையை அடையாமல் தடுக்க முடியும் அடிக்கடி இதய வலிக்கு ஆளாகுபவர்கள் அந்த வலியை அலட்சியம் செய்யாமல் இதயம் விடும் அபயக்குரலாகக் கருதி, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் ஏற்கனவே ரத்தமிகு அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் மருத்துவர்களின் துணையுடன் தக்க மருந்துகளின் மூலமாக ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை சரியான அளவில் வைத்திருக்கும் வகையில் அன்றாட உணவில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.உடல் பருமன் உள்ளவராக இருந்தால் உடலின் எடையைக்குறைக்க வேண்டும் ஏற்கனவே புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்றால் புகைப் பிடிப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும்.வாரத்தில் குறைந்தது 5 நாள்களாவது உடற்பயிற்சி செய்து உடலை வலுவாக வைத்துக் கொள்வதும் முக்கியம்.
நல்ல நூல்களில் படித்த தகவல்களில் இருந்து திரட்டப்பட்டவை.
நன்றி.முத்துமணி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment