Saturday, January 7, 2012

இணைய பாதுகாப்பு #3 - Safe Browsing


இணையத்தில் உலவும் போது வைரஸ், மால்வேர் போன்று பல ஆபத்துகள் உள்ளன. அவற்றிலிருந்து பாதுகாப்பது பெறுவது நமது கையில் தான் உள்ளது. இப்பகுதியில் இணையத்தில் பாதுகாப்பாக உலவுவது (Safe Browsing) பற்றி பார்ப்போம்.

1. நீங்கள் பயன்படுத்தும் இணைய உலவிகளின் புதிய பதிப்புகள் எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப்போது புதிய பதிப்பிற்கு மாறிக் கொள்ளுங்கள். ஏனெனில், புதிய பதிப்புகள் வரும் போது பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தியிருப்பார்கள்.

2. இணைய உலவிகளை தரவிறக்கம் செய்யும்போது அந்த இணைய உலவியின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். (இதனை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்)

3. இணைய உலவிகளை தரவிறக்கம் செய்யும் போதும், புதிய கணினி வாங்கும் போதும் முன்னிருப்பாக (Default) சில கருவிப்பட்டைகள் (Toolbar) இருக்கும். சில தளங்களில் மென்பொருள்கள் தரவிறக்கம் செய்யும் போது கருவிப்பட்டைகளும் நிறுவப்படும். எந்த கருவிப்பட்டைகளாக இருந்தாலும் அதனை நீக்கிவிடுங்கள். ஏனெனில் இது போன்ற கருவிப்பட்டைகள் நாம் இணையத்தில் உலவும் தகவலை நம்மை அறியாமலே சேகரிக்கின்றன. இதனை தவிர்த்தல் நலம். பொதுவாக அது போன்ற கருவிப்பட்டைகளை X குறியீட்டை சொடுக்கி தற்காலிகமாக செயல்நீக்கம் (Disable) செய்துக் கொள்ளலாம். ஆனால் நமது கணினியில் இருந்து முற்றுமாக நீக்குவது சிறந்தது.

கருவிப்பட்டைகளை நீக்குவது பற்றி அலெக்ஸா மதிப்பை அதிகரிக்கும் டூல்பார் என்றபதிவில் கூறியிருந்தேன். அதனை இங்கு மீள்பகிர்வு செய்கிறேன்.


ஃபயர்பாக்ஸில் நீக்குவதற்கு:

Tools ==> Add-ons சென்று, அங்கு Extensions என்ற பகுதிக்கு சென்றால் நிறுவப்பட்டுள்ள கருவிப்பட்டைகள் இருக்கும். அங்கு Uninstall என்பதை சொடுக்கி நீக்கிக் கொள்ளலாம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நீக்குவதற்கு:

Tools ==> Manage Add-ons என்பதை க்ளிக் செய்து, அங்கு Toolbars and extensions என்ற பகுதிக்கு சென்றால் நிறுவப்பட்டுள்ள கருவிப்பட்டைகள் இருக்கும். அங்கு Uninstall என்பதை சொடுக்கி நீக்கிக் கொள்ளலாம்.

கூகிள் க்ரோமில் நீக்குவதற்கு:

Setting என்ற விசையை அழுத்தி, Tools => Extensions என்ற பகுதிக்கு சென்றால் நிறுவப்பட்டுள்ள கருவிப்பட்டைகள் இருக்கும். அங்கு Uninstall என்பதை சொடுக்கி நீக்கிக் கொள்ளலாம்.


4. இணையத்தில் உலவும்போது அடிக்கடி உங்கள் உலவியின் நினைவிகளை (Cookies) அழித்துவிடுங்கள். குறிப்பாக பொதுக் கணினிகளை பயன்படுத்தும் போது இதனை செய்ய மறக்காதீர்கள்.

நினைவிகளை (Cookies) பற்றி முழுதும் தெரிந்துக் கொள்ள: குக்கீஸ் - 1, குக்கீஸ் - 2

நினைவிகளை நீக்க:

Firefox => options => Privacy (Tab) => Remove Individual Cookies > Remove All Cookies

Internet Explorer => Internet Options => General (Tab) => Delete (under Browsing History)

Google Chrome => Options => Under the Hood => Clear Browsing Data

5. மின்னஞ்சல், பண பரிமாற்றம் போன்ற தளங்களை பயன்படுத்தும் போது அதன் முகவரியை பார்க்கவும். https:// என்று இருந்தால் மட்டுமே பயன்படுத்தவும். வெறும் http:// என்று இருந்தால் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் https என்பது மறையாக்கம் (Encrypt) செய்யப்பட முறையாகும். இதன் மூலம் நாம் அனுப்பும் தகவல்களை மற்றவர்கள் (ஹேக்கர்கள்) தெரிந்துக் கொள்ள முடியாது.

6. மின்னஞ்சல்களில் வரும் தேவையில்லாத சுட்டிகளை தவிர்த்துவிடுங்கள். அந்த தளங்களில் செல்வதன் மூலம் வைரஸ், மால்வேர்கள் வரலாம்.

7. இணையத்தில் எண்ணற்ற இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் முன் கவனம் தேவை. அதிகமான மென்பொருள்களுடன் வைரஸ், மால்வேர்கள் இருக்கின்றன. இவைகள் உங்கள் தகவல்களை உங்களுக்கு தெரியாமலேயே மென்பொருளை உருவாக்கியவருக்கு அனுப்புகின்றன.

8. இவைகள் எல்லாவற்றையும் விட நல்லதொரு ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவது முதன்மையான பாதுகாப்பாகும். மேலும் அதனை அடிக்கடி மேம்படுத்துங்கள். (நான் பயன்படுத்தும் அவிரா ஆன்டி-வைரஸ் மென்பொருள் பற்றி இறைவன் நாடினால் பிறகு விளக்கமாக பதிவிடுகிறேன்)

இறைவன் நாடினால், தொடரும்....

No comments:

Post a Comment