Wednesday, November 2, 2011

குர்பானி செய்யப்பட்டவற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும



குர்பானி
“உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02)
“(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (22:37)
உழ்ஹிய்யா என்றால் என்ன?
மொழி வழக்கில் உழ்ஹிய்யா என்பது சூரியன் உதயமாகி அது உயர்வடைந்துள்ள நேரத்தைக் குறிக்கும். இஸ்லாமிய வழக்கில் உழ்ஹிய்யா என்பது, “சில நிபந்தனைகளுடன் குறித்த ஒரு தினத்தில் இறைவனின் நெருக்கத்தைப் பெறும் நோக்கில் அறுக்கப்படும் குறிப்பிட்ட வயதையுடைய ஒரு பிராணிக்குச் சொல்லப்படும் பெயராகும்.” என்று அறிஞர்கள் வரைவிலக்கணப் படுத்தியுள்ளார்கள்.

உழ்ஹிய்யாவின் முக்கியத்துவமும், சிறப்பும்

இறைவனின் கட்டளைப்படி இப்றாஹீம் (அலை) அவர்கள் தன் அன்பு மகன் இஸ்மாயீலை அறுக்க முனைந்தபோது அல்லாஹ் அதற்குப் பதிலாக சுவர்க்கத்திலிருந்து ஒரு ஆட்டை இறக்கி அதை அறுக்குமாறு சொன்னான். இந்த சோதனையில், இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர் இப்றாஹீம் (அலை) என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது.

இதனை நினைவூட்டும் வகையில் அமையப்பெற்ற முக்கியமான வணக்கங்களில் ஒன்றே உழ்ஹிய்யாவாகும். அதாவது இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக சைத்தானிய சக்திகளுக்கு அடிபணியமாட்டேன், இஸ்லாத்திற்காக எனது உடல் பொருள், சொந்தங்கள் அனைத்தையும் இழக்கத் தயார், மற்றவர்களுடன் இதற்காக போராடவும், இப்றாஹீம் (அலை) அவர்களைப் போன்று எந்த சவாலையும் ஏற்றுக்கொண்டு எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒரு ஏகத்துவவாதியாக வாழவும் நான் தயார் எனும் உணர்வை உருவாக்கும் உன்னத வணக்கம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. எல்லோரும் உண்டு கழித்து உற்சாகமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் ஹஜ்ஜூப் பெருநாள், மற்றும் அதை அடுத்துவரும் தினங்களில் தன் குடும்பத்தாரையும் ஏனைய ஏழைகளையும் சந்தோசப்படுத்தி அவர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் மிகச் சிறந்த வணக்கமாகவும், ஈகைப் பண்பை உருவாக்குவதாகவும், இறைவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய ஒரு செயலாகவும் காணப்படுகின்றது.

“யாருக்கு வசதி இருந்தும் அவர் உழ்ஹிய்யா கொடுக்கவில்லையோ அவர் நாங்கள் தொழும் திடலை நெருங்க வேண்டாம்.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா, ஹாகிம்)

உழ்ஹிய்யா கொடுப்பவர்:
உழ்ஹிய்யா கொடுப்பவர் வெறும் மாமிசத்தைப் பங்கிடுவதை மாத்திரம் தனது இலக்காக் கொள்ளாமல் பின்வரும் விடயங்களை கவனத்திற் கொள்வது கடமையாகும்.

01. இஹ்லாஸ் (மனத்தூய்மை):

உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் புகழும், அவர் நல்லவர் என்ற எண்ணமும் சமுதாயத்தில்
வளர்வது இயல்பானது. ஆனால், அதை அவர் எதிர்பார்க்கக்கூடாது. இறைவனின் திருப்தியை மட்டும் இலக்காகக்கொண்டு அவனுக்காக என்ற கலப்பற்ற தூய்மையான எண்ணத்துடன் அதை நிறைவேற்றல் வேண்டும். இவ்வாறு செய்வதாலேயே இஸ்லாம் காட்டித் தந்த கடமையை நிறைவேற்றியவராக அவர் மாறமுடியும். மற்றவர்களின் புகழுக்காகவும் பெயருக்காகவும் செய்துவிட்டு இறைவனிடம் கூலியை எதிர்பார்ப்பது எந்த
வகையிலும் நியாயமானதல்ல.

“உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02)

“(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (22:37)

இறைவன் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: “யார் எனக்காக ஒரு அமலைச் செய்து பிறருக்கும் அதில் பங்கு கொடுக்கிறானோ அவனையும் அவன் செய்த அமலையும் நான் விட்டு விடுகிறேன்.” (முஸ்லிம்)

“நான் உங்களிடத்தில் மிகவும் அதிகமாக அஞ்சுவது சிறிய இணைவைப்பைத்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, சிறிய இணைவைப்பு என்றால் என்ன என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள்: முகஸ்துதி என்று பதிலளித்தார்கள். இவ்வாறு முகஸ்துதிக்காக செயற்பட்டவர்களை நாளை மறுமையில் அல்லாஹ்: யாருக்கு காட்டுவதற்காக அவர்கள் அமல் செய்தார்களோ அவர்களிடமே செல்லுமாறும், அவர்களிடம் கூலி கிடைக்கிறதா என்று பார்க்குமாறும் கூறுவான்.” (அஹ்மத், பைஹகீ)

02. நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல்:

எமது எல்லா வணக்க வழிபாடுகளிலும் இஹ்லாஸ், நபியின் வழிமுறை என்ற இரண்டு விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இவை கவனிக்கப்படும் வணக்க வழிபாடுகள் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அந்த வகையில் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்பும் ஒருவர் நபியவர்கள் காட்டிய விதத்திலேயே தனது உழ்ஹிய்யாவும், ஏனைய விடயங்களும் அமைய வேண்டும் என்பதற்காக முயற்சி செய்ய வேண்டும். இறைவன் அவனது கட்டளைகளை அவனது தூதர் மூலமே கற்பிக்கிறான் அவரிடமிருந்து நாம் அவைகளைப் பெற்றுக் கொள்ளாமல், இஸ்லாமிய கடமையை நிறைவேற்றி விட்டதாகவும் கூலி கிடைக்கும் என்றும் நினைப்பது, புத்திஜீவிகளின் முடிவாக இருக்காது.

“உங்களுடைய தூதர் உங்களுக்கு எதைக் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள்.” (59: 07)

03. முடி, நகம் களைதல் கூடாது:

உழ்ஹிய்யா கொடுக்க நினைக்கும் ஒருவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து தனது நகம், முடி என்பவற்றை களைதல் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உழ்ஹிய்யா கொடுப்பதற்கு யாராவது விரும்பினால் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து பிறை பத்து (பெருநாள் தினம்) வரை தன் முடி, நகங்களை அகற்றாமலிருக்கட்டும்.” (முஸ்லிம், அஹ்மத்)

இதிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க நினைப்பவர் மாத்திரமே நகம், முடி ஆகியவற்றை அகற்றக்கூடாது என்பதும், அவர் யாருக்காக உழ்ஹிய்யா கொடுக்கிறாரோ அவர்கள் இதைப் பின்பற்றத் தேவையில்லை என்பதும் தெளிவாகின்றது.

04. நல்ல்ல வார்த்தை பேசுதல்:

உழ்ஹிய்யா கொடுப்பவர்களின் வீடு தேடி வரும் ஏழைகளுடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அவர்களை நச்சரிப்பதோ, நாம் கொடுத்தவற்றை சொல்லிக்காட்டி அவர்களை சிறுமைப்படுத்துவதோ நம் அமலை வீணாக்கிவிடும் செயல்களாகும். எனவே அதில் கவனமாக இருக்க வேண்டும், எப்போதும் நல்ல வார்த்தைகள் பேச பழகிக்கொள்ள வேண்டும்.

“தர்மம் செய்துவிட்டு (அதற்காக) துன்புறுத்துவதை விட நல்ல வார்த்தையும், மன்னிப்பும் (அல்லாஹ்விடத்தில்) மிகவும் சிறந்தவையாகும். இன்னும் அல்லாஹ் (தன்
படைப்புகளை விட்டும்) தேவை அற்றவன், மிகவும் சகிப்புத் தன்மை உடையவன்.”(2: 263)

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணி :
உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணியில் கவனிக்கப்படவேண்டிய நிபந்தனைகளை மூன்று வகையாக பிரித்து நோக்கலாம்.

01.பிராணிகளில் ஆடு, மாடு, ஒட்டகம் மட்டுமே உழ்ஹிய்யாவுக்கு தகுதியானதாகும்:

இதில் எந்த அறிஞரும் கருத்து முரண்பாடு கொள்ளவில்லை. எருமை மாட்டின் ஒரு வகையாக இருப்பதனால் அதையும் கொடுக்க முடியும் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இவை அல்லாதவைகளை நாம் கொடுக்க முடியாது. இதை விரிவாக வாசிக்க விரும்புவோர் அல்குர்ஆனில் 5:01,95ஃ 06:142,143ஃ 22:28 போன்ற இடங்களில் அவதானிக்கலாம்.

02. குறித்த வயதை அடைந்திருத்தல்:
ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் நாம் நினைப்பவற்றையெல்லாம் கொடுத்துவிட முடியாது, அவற்றில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வயது சொல்லப்பட்டுள்ளது. ஆவைகளை கவனத்திற் கொள்ள வேண்டும்.

செம்மறியாடு: ஆறு மாதங்கள் பூர்த்தியடைந்தது.
வெள்ளாடு: ஒரு வருடம் பூர்த்தியடைந்தது.
மாடு: இரு வருடம் பூர்த்தியடைந்திருத்தல்.
ஓட்டகம்: ஐந்து வருடங்கள் பூர்த்தியடைந்திருத்தல்.

03. குறைகளற்றதாக இருத்தல்:

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணிகளில் உள்ள குறைகள் பற்றி சொல்லப்படுபவற்றை தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக அவைகளை மூன்று வகையாகப் பிரித்து நோக்குவோம்.

1. ஹதீஸ்களில் தெளிவாகச்சொல்லப்பட்டுள்ள குறைகள்: இவைகளுள்ள பிராணியை உழ்ஹிய்யாவுக்காக அறுக்க முடியாது. அந்த வகையில் பின்வரும் குறைகளைக் குறிப்பிடலாம்.

தெளிவான குருடு: ஒற்றைக்கண் செயலிழந்து போதல், குருடாக இருத்தல்.

தெளிவான நோய்: அதாவது குறித்த பிராணியின் இறைச்சியை கெடுக்கக்கூடிய அல்லது
அதன் மெலிவுக்கு காரணமான நோய்கள் என்று இமாம் இப்னு குதாமா (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

தெளிவான முடம்.
மிகவும் மெலிந்தது, பலவீனமானது.

“ஒரு முறை எங்களுக்கு மத்தியில் எழுந்த நபியவர்கள்: தெளிவான குருடு, தெளிவான நோய், தெளிவான முடம், தேர முடியாத மெலிவு எனும் நான்கு குறைகளை உடைய பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியாது” என்றார்கள்.
(அறிவிப்பவர்: பராஃ பின் ஆஸிப் (ரழி),
நூல்: அபூதாவுத், திர்மிதி, நஸாஈ, இப்னுமாஜாஹ்)

மேலே சொல்லப்பட்ட குறைகளுடன் குருடு, ஆட்டின் பின்புறத்திலுள்ள கொழுப்புடன் கூடிய சதைப்பிண்டம் அகற்றப்பட்டிருத்தல் போன்றவற்றையும் அல்லது அதுபோன்ற நிலையில் உள்ள குறைகளையும், அதைவிடவும் கூடிய நிலையிலுள்ள குறைகளையும் அதனுடன் அறிஞர்கள் சேர்த்துள்ளனர். எனவே இவைகளில் ஏதாவது ஒன்று குறித்த பிராணியில் இருப்பின் அது உழ்ஹிய்யாவிற்கு தகுதியற்றதாகவே கருதப்படும்.

2. இருக்க முடியுமான குறைகள்:

உழ்ஹிய்யா கொடுக்கப்படும் பிராணியில் உள்ள சில குறைகளால் அந்தப் பிராணியை
நாம் ஒதுக்கத் தேவையில்லை என்ற நிலையில் உள்ள குறைகளையே இது குறிக்கும்.
பின்வருவனவற்றை அத்தகைய குறைகளாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

நலம் போடப்பட்டவை.
அடிப்படையிலேயே கொம்பு இல்லாதது.
அடிப்படையிலேயே காது இல்லாதது.
சிறிய காதுள்ளது.
சில பற்க்கள் விழுந்த்தவை.

கர்ப்பிணி:

இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “கர்ப்பிணியாக உள்ள பிராணிகளைக் கொடுக்க முடியும், அதன் குட்டி செத்த நிலையில் வெளியேறினால் அதை அறுக்க வேண்டியதில்லை என்பதே இமாம் ‘ஷாஃபிஈ, அஹ்மத் போன்றவர்களின் கருத்தாகும்’ அது உயிருடன் வெளியேறினால் அதையும் அறுக்க வேண்டும்.” (மஜ்மூஉல் பதாவா)

3. பின்வரும் குறைகள் இருக்கும் பிராணிகளை உழ்ஹிய்யா கொடுக்க முடியுமா, முடியாதா என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.

காது முன்புறமாகவோ பின்புறமாகவோ வெட்டப்பட்டது அல்லது துளையிடப்பட்டது அல்லது சிதைக்கப்பட்டது. காது, கொம்பின் அரைப்பகுதி வெட்டப்பட்ட பிராணிகளையும் உழ்ஹிய்யாவுக்காக தேர்வு செய்ய முடியுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து முரண்பாடு நிலவுகின்றது. எது எவ்வாறாயினும் உழ்ஹிய்யாவின் முழுமை கருதி இவை போன்றவற்றை தவிர்த்துக்கொள்வது நல்லது.

பொதுவாக, உழ்ஹிய்யாவுக்காக நாம் தெரிவு செய்யும் பிராணிகள் கொழுத்ததாகவும் எல்லா நோய்களை விட்டும் தூரமாகியும் இருப்பதுடன் பார்ப்பதற்கு அழகானதாயும் புசிப்பதற்கு சிறந்ததாகவும் இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.

நபி (ஸல்) அவர்கள் “கொம்புகளை உடைய, கறுப்பு வெள்ளை நிறம் கலந்த இரண்டு ஆண் ஆடுகளை உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள், தனது கரத்தினால் அறுத்தார்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்பீர் சொன்னார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)

மதீனாவில் நாம் கொழுத்த (பிராணிகளை) உழ்ஹிய்யா கொடுத்தோம் முஸ்லிம்களும் அவ்வாறே செய்தார்கள் என்று அபூ உமாமா பின் ஸஹ்ல் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (புஹாரி)

உழ்ஹிய்யா கொடுப்பதற்கான நேரம்:

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை என்பது நோன்புப் பெருநாள் தொழுகையை விடவும் சற்று முன்னர் இடம்பெறுகிறது. எனவே தொழுகை முடிந்ததன் பின்பே உழ்ஹிய்யாவுக்காக பிராணிகளை அறுத்தல் வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் தொழுவதற்கு முன்னர் அறுத்தாரோ நிச்சயமாக அவர் தனது (தேவைக்காகவே) அறுத்தார். (அது உழ்ஹிய்யா அல்ல.)தொழுகையும் இரண்டு குத்பாக்களும் முடிந்ததன் பின்பு யார் அறுத்தாரோ அவர் தனது வணக்கத்தைப் பூரணப்படுத்தினார், சுன்னத்தையும் நிறைவேற்றினார்.” (புஹாரி, முஸ்லிம்)

“நாம் தொழும் வரை யார் அறுக்கவில்லையோ அவர்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கட்டும்” என நபியவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

நபியவர்கள் பெருநாள் தொழுகை முடிந்தபின் கூறினார்கள்: “யார் தொழுவதற்கு முன் அறுத்தாறோ அவர் உழ்ஹிய்யாவுக்காக வேறு ஒன்றை (ஒரு பிராணியை) அறுக்கட்டும்.” (புஹாரி)

உழ்ஹிய்யா என்பது தொழும் திடலில் தொழுகையை முடித்த பின்பு கூட்டாக நிறைவேற்றப்படுவதே சிறந்ததாகும் அவ்வாறே நபியவர்களின் காலத்தில் நடந்திருக்கிறது.

பிராணியை அறுக்கும் போது:
உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்படும் பிராணிகள் சாகப்போகிறதுதானே என்பதற்காக நோவினை செய்வதோ, அதற்கு தீனி வழங்காமல் இருப்பதோ நாம் அதற்குச் செய்யும் அநியாயங்களாகும். இறைவன் கூறுகிறான் என்ற ஒரே காரணத்திற்காகவே நாம் அவைகளை அறுத்து புசிக்கவும், மற்றவர்களுக்கு கொடுக்கவும் செய்கிறோம் என்பதை
மனதிலிருத்திக் கொள்ள வேண்டும்.

உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்பட்டுள்ள பிராணிகளை அறுக்கும்போது பின்வரும் விடயங்களை கவனிக்க வேண்டும்.

01. கத்தியை தீட்டுதல், பிராணியை விட்டும் மறைத்தல்:

“உங்களில் ஒருவர் பிராணியை அறுக்க விரும்பினால் அதற்காகத் தயாராகட்டும், கத்தியை தீட்டிக்கொள்ளட்டும், அறுக்கப்படும் பிராணியை விட்டும் அதை மறைவாக வைக்கட்டும்.” என்று நபி (ஸல்) அவர்கள் ஏவினார்கள். (இப்னு மாஜாஹ், பைஹகீ)

02. உழ்ஹிய்யாவை கொடுப்ப்பவர் அறுப்பது சிறந்தது:

“நபி (ஸல்) அவர்கள்: தான் உழ்ஹிய்யா கொடுக்கும் பிராணிகளை தனது கரத்தினாலேயே அறுக்கக்கூடியவராக இருந்தார்கள்.” என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இப்னு மாஜா, ஹாகிம்)

இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் புஹாரியிலும் பதிவாகியுள்ளது.

பிறரிடம் கொடுத்தும் அறுக்கலாம் ஆனால் அறுப்பவர் முஸ்லிமாக இருக்கின்றாரா? நன்றாக அறுக்கத் தெரிந்தவரா? என்று பார்த்துக்கொள்ள வேண்டும்.

03. அல்லாஹ்-வின் பெயர் சொல்லுதல்.

அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாத எந்த மாமிசமும் உண்பதற்கு தடைசெய்யப்பட்டதாகும். எனவே, பிராணியை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள்: “கொம்புகளை உடைய, கறுப்பு வெள்ளை நிறம் கலந்த இரு ஆண் ஆடுகளை உழ்ஹிய்யா கொடுத்தார்கள், அவற்றை தனது கரத்தினாலேயே அறுத்தார்கள், அல்லாஹ்வின் பெயர் சொல்லி தக்பீர் சொன்னார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)

“பிஸ்மில்லாஹி அல்லாஹூ அக்பர்” என்று சொல்லுதல் வேண்டும்.

“பிஸ்மில்லாஹ்” என்று சொன்னாலும் போதுமானது.

04. அறுக்கப்பட்ட பிராணியின் உயிர் முழுமையாகப் பிரியும் வரை ஓய்வாக விடுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் அறுத்தால் அறுப்பதை நன்றாக அறுக்கட்டும், கத்தியை கூர்மையாக்கிக் கொள்ளட்டும், அறுக்கப்பட்ட பிராணியை ஓய்வெடுக்க விடட்டும்.” (முஸ்லிம்)

பங்கு வைத்தல்.

உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணிகளை பங்கு வைக்கும்போது மூன்று பங்குகளாக அதைப்பிரிக்கலாம், தனக்கும் தனது குடும்பத்திற்கும் ஒரு பகுதி மற்ற இரண்டும் வீடு தேடி வராத ஏழைகளுக்கும், கேட்டு வருவோருக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

“அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக்கொடுங்கள்.” (22:18)

“அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள், (தேவையுடையோராய் இருந்தும் பிறறிடம்) கேட்காதவர்களுக்கும், அதை யாசிப்போருக்கும் உண்ணக்கொடுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவ்வாறு அதனை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தோம்.” (22:36)

நபியவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின்போது தான் அறுத்த ஒவ்வொரு பிராணியிலிருந்தும்
ஒவ்வொரு துண்டு வீதம் எடுத்து சமைத்து சாப்பிட்டார்கள்.

பங்குவைக்கும் போது தோல், தலை என்பனவும் பங்கு வைக்கப்படுதல் வேண்டும் அவற்றை அறுத்தவருக்கு கூலியாகக் கொடுப்பதோ, அதை விற்பதோ தடை செய்யப்பட்டுள்ளது.

“யார் உழ்ஹிய்யாப் பிராணியின் தோலை விற்றானோ அவன் உழ்ஹிய்யா கொடுத்தவனாக கருதப்படமாட்டான்.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகி, ஹாகிம்)

நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை உழ்ஹிய்யாவுக்காக கொண்டு வரப்பட்ட ஒட்டகத்தை கவனிக்குமாறும் அதை பங்கிடுமாறும், அதன் இறைச்சி, தொழி, அதைப் போர்த்தியிருந்த ஆடை எல்லாவற்றையும் ஏழைகளுக்கு கொடுக்குமாறும் அவற்றில் எதையும் அறுத்தவருக்கு கொடுக்க வேண்டாம் என்றும் ஏவினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

ஐயமும் தெளிவும்.

01. உழ்ஹிய்யாவின் போது நிய்யத்தை வாயால் மொழிய வேண்டுமா?

இல்லை, நிய்யத் என்பது எண்ணம் அது வாயால் சொல்லப்படுவதில்லை. ஆனால் பிறருக்காக உழ்ஹிய்யா கொடுக்கும் ஒருவர் இறைவா! இதை இன்னாருக்காக ஏற்றுக் கொள்வாயாக என்று சொல்வதில் தப்பில்லை. இது பிரார்த்தனையாகும்.

02. உழ்ஹிய்யாவுக்காக பசு மாடு கொடுக்கலாமா?

மாடு என்ற பொதுப் பெயரில் பசுவும் அடங்குகின்றது. பசுவை கொடுக்கக்கூடாது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை. எனவே அதை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், மிகவும் சிறந்தவற்றை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் பசுவைத் தவிர்ப்பவரை குறைகாண முடியாது.

03. வயது கூடிய பிராணியை கொடுக்கலாமா?

ஆடு, மாடு, ஒட்டகை போன்ற பிராணிகளுக்கு சொல்லப்பட்டுள்ள வயதை விட குறைந்த வயதை கொடுப்பதே தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த வயதெல்லையை தாண்டியதை வழங்கலாம். ஆனால் வயது சென்றதால் மிகவும் மெலிந்து காணப்படுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

04. எருமை மாடு கொடுக்கலாமா?

மாடு என்ற வட்டத்தில் எருமை மாடும் அடங்குகின்றது எனவே அதைக்கொடுக்கலாம்
என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

05. பலர் சேர்ந்து ஒரு பிராணியை கொடுக்கலாமா?

மாடு, ஒட்டகம் இரண்டிலும் ஒரு பிராணிக்கு ஏழு பேர் வீதம் கூட்டுச்சேர்ந்து கொடுக்கலாம்.
“மாடு, ஒட்டகம் இரண்டிலும் ஒரு பிராணிக்கு ஏழு பேர் வீதம் கூட்டுச்சேருமாறு நபியவர்கள் எமக்கு ஏவினார்கள்.” (புஹாரி, முஸ்லிம்)

இவர்கள் குறித்த நபரின் குடும்ப அங்கத்தவர்களாகவும், அல்லது குடும்பமில்லாதவர்களாகவும் இருக்கலாம். ஏனெனில், ஹதீஸ் பொதுவாகவே வந்துள்ளது.
ஆட்டில் கூட்டுச்சேர முடியாது.

06. மற்றவருக்காக நாம் அறுக்கலாமா?

மற்றவரின் பெயரில் நாம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம், நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியர்களுக்காக அறுத்துள்ளார்கள். அதுபோல் தனது சமுதாயத்தில் உழ்ஹிய்யாவை நிறைவேற்ற முடியாதவர்களுக்காகவும் அறுத்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் இறைவனின் பெயர் சொல்லி ஒரு ஆட்டை அறுத்துவிட்டு இறைவா! இதை முஹம்மதிடமிருந்தும் அவருடைய குடும்பம், அவருடைய சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள். (முஸ்லிம்)

07. தன் வீட்டில் உள்ளவர்களுக்குமாகச்சேர்த்து ஒருவர் ஒரு பிராணியை உழ்ஹிய்ய்யாவாக கொடுக்க்க முடியுமா?

கொடுக்கலாம் நபி (ஸல்) அவர்கள் தனது மனைவியருக்காகவும் தனக்காகவும் ஒரு ஆட்டை உழ்ஹிய்யாவாக கொடுத்துள்ளார்கள்.

08. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் உழ்ஹிய்யாவிற்க்கு மிகவும் சிறந்தது எது?

முதலில் ஒட்டகம் அதையடுத்து மாடு அதற்கடுத்த தரத்தில் ஆடு சிறப்புப் பெருகிறது ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் “ஜும்மாவிற்கு முதலில் வருபவர் ஒரு ஒட்டகம் கொடுத்ததற்கான கூலியை பெருவதாகவும், இரண்டாமவர் ஒரு மாடு கொடுத்ததற்கான கூலியையும் மூன்றாமவர் ஒரு ஆடு கொடுத்ததற்கான கூலியையும் அதற்கடுத்தவர் ஒரு கோழி அவருக்கு பின் வருபவர் ஒரு முட்டையை கொடுத்ததற்கான கூலியை பெருவதாகவும்” குறிப்பிடுகிறார்கள். (புஹாரி)

09. பிறகு பணம் தருவதாகச் சொல்லி இன்னுமொருவரிடம் உழ்ஹிய்யாவை அறுக்கச் சொல்லலாமா?

அவ்வாறு செய்ய முடியும் என்று சவூதி அரேபிய உலமாப்பேரவை தீர்ப்பளித்துள்ளது.

10. மரணித்தவருக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

இதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு நிலவுகின்றது.

மரணித்தவர்களுக்காக நாம் தர்மம் செய்ய முடியும், உழ்ஹிய்யாவும் ஒரு தர்மமே எனவே அதை செய்வதில் தப்பில்லை என்று சில அறிஞர்களும், நபியவர்களோ ஸஹாபாக்களோ
இதை செய்யவில்லை எனவே நாமும் செய்ய முடியாது என்று சில அறிஞர்களும் குறிப்பிடுகின்றார்கள்.

11.உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் எழும்புகளை உடைக்கக்கூடாது என்பது சரியா?

அது தவறான கருத்து.

12. உழ்ஹிய்யாவை அறுத்தவருக்கு கூலியாக அல்லாமல் அந்த உழ்ஹிய்யாவிலிருந்து கொடுப்பது தவறா?

அதை கூலியாகக் கொடுப்பதே தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரை விடவும் தேவையுடையவர்கள் இருப்பின் அவர்களை முற்படுத்த வேண்டும்.

13. உழ்ஹிய்யா இறைச்சியை சேமித்து வைத்து காலம் தாழ்த்தி சாப்பிடலாமா?

ஆரம்பத்தில் உழ்ஹிய்யா இறைச்சியை சேமிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. பின்பு நபியவர்கள் அதை மாற்றி சேமித்து வைத்து சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கினார்கள்.
ஆனால் சமூகத்தில் கஷ்டம் நிலவினால் மற்றவர்களுக்கு பங்குவைப்பதே சிறந்தது.

“(உழ்ஹிய்யாவுக்காக அறுத்தவற்றில் இருந்து) நீங்கள் சாப்பிடுங்கள், பிறருக்கும் உண்ணக் கொடுங்கள், சேமித்து வையுங்கள். அந்த ஆண்டு மனிதர்களுக்கு கஷ்டம் இருந்தது அதனால் அவர்களுக்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நினைத்தேன்” (அதனாலேயே சேமிப்பதற்கு தடைவிதித்திருந்தேன்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புஹாரி, முஸ்லிம்)

14. உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்பட்ட பிராணியின் மாமிசத்திலிருந்து மாற்று மத சகோதரர்களுக்கு வழங்க முடியுமா?

மாற்று மத சகோதரர் இஸ்லாத்திற்கு எதிராக போராடாதவராக இருந்தால் கொடுக்கலாம்.

“(விசுவாசிகளே!) மார்க்க (விஷய)த்தில் உங்களுடன் எதிர்த்துப்போரிடாமலும் உங்கள்
இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அத்தகையோருக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்கள் பால் நீங்கள் நீதமாக நடந்து கொள்வதையும் இறைவன் தடுக்க வில்லை, நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்வோரை நேசிக்கிறான்.” (60:08)

அதுபோலவே அபூபக்கரின் மகள் அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் தாய் இனைவைப்பவளாக இருந்தபோதிலும் அவளை சேர்ந்து நடக்குமாறும் பணரீதியான உதவிகளை செய்யுமாறும் நபியவர்கள் ஏவினார்கள் என்ற செய்தி புஹாரியில் பதிவாகியுள்ளது.

15. உழ்ஹிய்யாவை எதுவரை கொடுக்கலாம்?

ஹஜ்ஜூப் பெருநாள் தினம், அதை அடுத்துவரும் மூன்று தினங்களிலும் கொடுக்கலாம் என்பதே அதிகமான அறிஞர்களின் கருத்தாகும்.

16. உழ்ஹிய்யாவாக கொடுக்கப்பட்ட பிராணியின் தலை, தோல், எழும்பு போன்றவற்றை ஒரு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமா?

இவ்வாறு செய்வதனால்தான் நாளை மறுமையில் இவைகள் வரும் என்றொரு மூட நம்பிக்கை எம் சமூகத்திடம் உள்ளது. அதற்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.

No comments:

Post a Comment