Friday, July 8, 2011

இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு: இன்று துவக்க விழா! காயல்பட்டினத்தில் விழாக்கோலம்!

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பில், இஸ்லாமிய தமிழிலக்கிய 15ஆவது மாநாடு ஜூலை மாதம் 08, 09, 10 தேதிகளில் காயல்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

இம்மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய கண்காட்சி, கருத்தரங்கம், பட்டிமன்றம், கவிதையரங்கம் என பலவும் இடம்பெறவுள்ளன. முக்கிய தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இன்று துவங்கவுள்ள இம்மாநாட்டிற்காக காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஆயத்தப்பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
எல்.எஃப்.ரோட்டில் துவங்கி, நகரின் பிரதான வீதி, திருச்செந்தூர் சாலையில் கே.எம்.டி.மருத்துவமனை வரை குழல் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. ஊரின் நுழைவுப் பகுதிகளில் வரவேற்பு வளைவுகளும் நிறுவப்பட்டுள்ளன. மக்கள் திரள் அதிகமிருக்கும் பகுதிகளில் மாநாட்டு நிகழ்ச்சிகளை விளம்பரப்படுத்தும் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்தும், தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பார்வையாளர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
பேராளர் பதிவு:
துவக்கமாக, இன்று காலை 10 மணிக்கு பேராளர் பதிவும், வரவேற்பும் காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையிலுள்ள வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

துவக்க விழா:
மாநாட்டு துவக்க விழா இன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க வளாகத்தில், வரகவி காசிம் புலவர் பந்தலில், வள்ளல் சீதக்காதி நுழைவாயிலில், சதக்கத்துல்லாஹ் அப்பா அரங்கத்தில் நடைபெறுகிறது.

மாநாட்டு ஏற்பாட்டுக் குழு தலைவரும், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவருமான ஹாஜி எம்.எம்.உவைஸ் துவக்க விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். நகர பிரமுகர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் வரவேற்புரையாற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து, மவ்லானா ஜலாலுத்தீன் ரூமி அவர்களின் “மஸ்னவீ ஷரீஃப்” தமிழாக்க நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, இலங்கை நீதித்துறை அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். வேலூர் பாராளுமன்றத் தொகுதி உறுப்பினர் எம்.அப்துர்ரஹ்மான் எம்.பி வாழ்த்துரை வழங்குகிறார்.

கவியரங்கம்:
இன்றிரவு 07.00 மணிக்கு பேராசிரியர் ஈரோடு தமிழன்பன் தலைமையில் “ஊடகம்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது. துவக்கமாக, இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் வடக்கு கோட்டையார் வ.மு.செய்யது அஹமது வரவேற்புக் கவிதை வழங்குகிறார்.

பின்னர் நடைபெறும் கவியரங்கத்தில், தமிழகத்தின் தலைசிறந்த கவிஞர்கள் கலந்துகொண்டு கவிதைகள் படைக்கின்றனர்.

இஸ்லாமிய பாடல் அரங்கம்:
துவக்க விழா நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பாவலர் எஸ்.எஸ்.அப்துல் காதிர் அரங்கத்தில், இன்றிரவு 09.00 மணி முதல் 10.00 மணி வரை இஸ்லாமிய பாடல் அரங்கம் கவிஞர் ஹாஜி எஸ்.செய்யது அஹ்மது தலைமையில் நடைபெறுகிறது.

ஆழ்வை எம்.ஏ.உஸ்மான் குழுவினரும், நெல்லை அபூபக்கர் குழுவினரும் இவ்வரங்கில் இஸ்லாமிய பாடல்களை இசைக்கவுள்ளனர்.

முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சிகளனைத்தையும், மாநாட்டு ஏற்பாட்டுக் குழு பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நெறிப்படுத்துகிறார்.

மாநாட்டுக்கான பிரத்தியேக இணையத்தளம் காண www.kayalitlc.org 

No comments:

Post a Comment