Monday, February 7, 2011

புற்றுநோய் மருத்துவத்தில் புதிய முன்னேற்றம்

புற்றுநோய் பெரும்பாலும் குணப்படுத்த இயலாத நோயாகவே உலகம் முழுதும் கருதப்படுகிறது.  புற்றுநோய்க்கிருமிகள் அதற்கான அழிப்புமருந்துகளினும் அதிக வீரியம் பெறுவது எப்படி என்பது ஆய்வாளர்களுக்கு புதிராக இருந்துவந்தது. இந்நிலையில் புற்றுநோயாளிகளைக் குணப்படுத்த புதிய வழிமுறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன், ஷீலா ஜோன் ஸ்மித் ஆகியோர் புற்றுநோய்க் கட்டிகளில் உள்ள புற்று வைத்த திசுக்களை அழிக்க, பரவாமல் தடுக்க, நோயாளிகளைக் குணப்படுத்த செலுத்தப்படும் ஊசி மருந்தும் இதர சிகிச்சை முறைகளும் தோல்வி அடைவது ஏன் என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
புற்றுநோய் பாதித்த திசுக்களுக்குச் செல்லும் மருந்தின் வீரியத்தைக் குலைத்து அதை வேலை செய்ய விடாமல் தடுக்கும் கூட்டுத் திசுக்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுவிட்டனர்.
இது குறித்த ஆய்வொன்றில் சோதனைச் சாலையில் எலிகளுக்கு புற்றுநோயை உண்டாக்கி அதன் பாதிக்கப்பட்ட திசுக்களுக்குச் செல்லும் மருந்து வேலை செய்யாமல் தடுக்கும் செல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தி அவற்றைக் கொன்றனர். அதன் பிறகு மருந்து வேகமாக வேலை செய்து புற்றுநோய் செல்கள் அழிக்கப்பட்டு நோய் குணமானது. இதை மனிதர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு முன்னர் மேலும் சிலமுறை சோதனைகளை நடத்தி உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
புற்றுநோய் பாதித்த நோயாளிகளின் புற்றுக் கட்டிகளில் எப்.ஏ.பி. என்கிற அந்த ஸ்ட்ரோமல் செல்கள் இருப்பதை லாயிட் ஓல்ட் என்ற விஞ்ஞானியும் அவருடைய சகாக்களும் 20 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தனர். ஆனால் அதுதான் மருந்தை வேலை செய்யவிடாமல் தடுக்கிறது என்பதை லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டக்ளஸ் பியர்சன், ஷீலா ஜோன் ஸ்மித் ஆகியோர் இப்போது கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு புற்றுநோய் ஆய்விலும் மருத்துவத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது

No comments:

Post a Comment