Monday, January 9, 2012

பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

குடிமக்களுக்கு வழங்கும் பாஸ்போர்ட், ரேசன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்களிக்கும் உரிமை முதலான அநேக வசதிகளைப் பெற பிறப்பு சான்றிதழ் அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். அதுபோன்று, சொத்து வாரிசுரிமை, திருமணம் செய்ய தகுதியடைந்ததைச் சட்டரீதியாக கோருதல், பாடசாலை முதல் அரசு உத்தியோகம் வரை சேர்க்கைகளுக்கு என பல்வேறு விஷயங்களுக்குப் பிறந்த தேதியினை அரசில் ஆவணப்படுத்தியிருப்பது கட்டாயம்.

இந்தியாவில், 1969 ஆண்டு பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டப்படி, பிறந்த ஒவ்வொரு குழந்தையும் 21 தினங்களுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்காக, கிராம/டவுன் பதிவுத்துறை, மாவட்டப் பதிவுத்துறை, மாநில பதிவுத்துறை, மத்திய பதிவுத்துறை என சிறப்பாக கட்டமைத்து இணைக்கப்பட்ட பொது பதிவுத்துறையினை இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

ஒருவர் பிறப்புச் சான்றிதழ்பெற, பிறந்தத் தேதியினைப் பதிவு துறையில் பதிவு செய்திருக்க வேன்டும். பதிவு அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட பதிவு விண்ணப்பப்படிவம் வாயிலாக, குழந்தை பிறந்த 21 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட ஏரியாவிலுள்ள பதிவு அதிகாரியிடம் பிறப்பினைப் பதிவு செய்ய வேண்டும். குழந்தை பிறந்த மருத்துவமனைகளிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

ஒருவேளை குறிப்பிட்ட 21 நாட்களுக்குள் பதிவுத்துறையில் பிறப்பு பதிவுசெய்யப்படவில்லை என்றாலோ அல்லது வீடுகளில் பிறப்பு நடந்திருந்தாலோ, ஏரியா காவல்துறை மூலம் பிறப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னர் பதிவுத்துறை அதிகாரிகளால் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கீழ்கண்ட மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்கள், பிறப்பு சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பப்படிவங்கள்:

1. சென்னை : குடும்பநல வாரியம்(Health and Family Welfare Department) -

2. கோவை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

3. ஈரோடு: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

4. சேலம்: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

5. தூத்துக்குடி: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

6. மதுரை: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

7. திருநெல்வேலி: மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகத்துறை(Municipal Administration & Water Supply Department) - படிவம்

Saturday, January 7, 2012

ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள்


இன்றைய இணைய உலகம் ஹேக்கர்ஸ் எனப்படும் நவீனத் திருடர்களின் கைகளில் இருக்கிறது. அவர்கள் நமது தகவல்களை திருடுவதற்கு பயன்படுத்தும் வழிகளில் ஒன்று ஈமெயில்கள். அவர்கள் ஸ்பாம் (Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்களை அனுப்பி நம்மை சிக்க வைப்பார்கள். முழுவதுமாக நம்மால் பாதுகாக்க முடியாவிட்டாலும், முடிந்தவரை பாதுகாக்க எனக்கு தெரிந்த சில வழிகளை இங்கு பகிர்கிறேன்.

1. உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உங்கள் தளங்களிலோ, அல்லது வேறு தளங்களிலோ பதிவு செய்யாதீர்கள். அப்படி பதிவு செய்ய விரும்பினால் username@gmail.com என்பது போல கொடுக்காமல் படமாகவோ(images) வேறு விதமாகவோ கொடுக்கலாம். உதாரணத்திற்கு username[at]gmail.com. ஏனெனில் இணையத்தில் பரவிக் கிடக்கும் மெயில் ஐடிக்களை சேகரிப்பதற்காகவே நிறைய சாப்ட்வேர்கள் இருக்கின்றன. அவைகள் @ என்பதற்கு முன்னும், பின்னும் வார்த்தைகள் இருந்தால் அதனை ஈமெயில் ஐடி என்பதை கணித்து சேகரிக்கும்.

2. சில தளங்களில் Newsletter-ல் சேருமாரும், அல்லது சில ஃபைல்களை பதிவிறக்கம் செய்ய இமெயில் ஐடியை கொடுக்கவும் சொல்லும். அவற்றில் கொடுக்கும் முன் அந்த தளம் நம்பகமானதுதானா? என பார்த்து கொடுக்கவும். ஏனெனில் சில தளங்கள் அவ்வாறு சேகரித்த தகவல்களை மற்றவர்களுக்கு விற்கவும் வாய்ப்புள்ளது.

3. Gmail, Yahoo போன்றவற்றை மொபைல்களில் பயன்படுத்துவதற்காக Nimbuzz, Fring போன்ற மொபைல்களுக்கான சாஃப்ட்வேர்கள் அதிகம் கிடைக்கின்றன. இவைகளை பயன்படுத்த வேண்டுமெனில் நாம் கூகிள், யாஹூ ஆகியவற்றின் Username, Password-ஐ கொடுக்க வேண்டும். இப்படி கொடுப்பதினால் எந்நேரமும் நமது கணக்கு திருடப்படலாம். எந்த நிலையிலும் இது போன்ற மூன்றாம் தரப்பு மென்பொருள்களை பயன்படுத்தாதீர்கள். சில சமயம் என் நண்பர்களிடமிருந்து தினமும் ஸ்பாம் மெயில்கள் (Spam Mails) வந்துக் கொண்டிருந்தன. அவர்களில் அதிகமானோர் Nimbuzz பயன்படுத்தியிருந்தார்கள்.

4. சில சமயங்களில் நமக்கு வித்தியாசமான ஈமெயில்கள் நமக்கு வரும். நமக்கு லாட்டரியில் பணம் கிடைத்திருப்பதாகவும், நமது மெயில் ஐடிக்கு பரிசு விழுந்திருப்பதாகவும் மெயில்கள் வரும். சில சமயம் ஆபாச மெயில்களும் வரும். அது போன்ற மெயில்களை உடனே அழித்துவிடுங்கள். அது போன்ற மெயில்கள் நமது வங்கி கணக்கு உள்ளிட்ட தகவல்களை கேட்கும். அப்படி நாம் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான்! பிறகு நமது பணம் களவாடப்படும்.

5. ப்ரவ்சிங் சென்டர்களுக்கு சென்று இமெயில்களை பார்ப்பதாக இருந்தால் "Keep Me signed in", "Keep me logged in" என்பதில் டிக் செய்யாமல் உள்நுழையவும். மெயில்களை பார்த்துவிட்டு வெளிவரும் போது Sign Out செய்ய மறவாதீர்கள்.

எனக்கு தெரிந்தவற்றை மட்டும் தான் இங்கு சொல்லியிருக்கிறேன். உங்களுக்கும் ஏதாவது இதை பற்றி தெரிந்தால் சொல்லலாம்.

இணைய பாதுகாப்பு #3 - Safe Browsing


இணையத்தில் உலவும் போது வைரஸ், மால்வேர் போன்று பல ஆபத்துகள் உள்ளன. அவற்றிலிருந்து பாதுகாப்பது பெறுவது நமது கையில் தான் உள்ளது. இப்பகுதியில் இணையத்தில் பாதுகாப்பாக உலவுவது (Safe Browsing) பற்றி பார்ப்போம்.

1. நீங்கள் பயன்படுத்தும் இணைய உலவிகளின் புதிய பதிப்புகள் எப்பொழுதெல்லாம் வருகிறதோ, அப்போது புதிய பதிப்பிற்கு மாறிக் கொள்ளுங்கள். ஏனெனில், புதிய பதிப்புகள் வரும் போது பாதுகாப்பு வசதிகளை அதிகப்படுத்தியிருப்பார்கள்.

2. இணைய உலவிகளை தரவிறக்கம் செய்யும்போது அந்த இணைய உலவியின் அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து மட்டும் தரவிறக்கம் செய்யுங்கள். (இதனை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்)

3. இணைய உலவிகளை தரவிறக்கம் செய்யும் போதும், புதிய கணினி வாங்கும் போதும் முன்னிருப்பாக (Default) சில கருவிப்பட்டைகள் (Toolbar) இருக்கும். சில தளங்களில் மென்பொருள்கள் தரவிறக்கம் செய்யும் போது கருவிப்பட்டைகளும் நிறுவப்படும். எந்த கருவிப்பட்டைகளாக இருந்தாலும் அதனை நீக்கிவிடுங்கள். ஏனெனில் இது போன்ற கருவிப்பட்டைகள் நாம் இணையத்தில் உலவும் தகவலை நம்மை அறியாமலே சேகரிக்கின்றன. இதனை தவிர்த்தல் நலம். பொதுவாக அது போன்ற கருவிப்பட்டைகளை X குறியீட்டை சொடுக்கி தற்காலிகமாக செயல்நீக்கம் (Disable) செய்துக் கொள்ளலாம். ஆனால் நமது கணினியில் இருந்து முற்றுமாக நீக்குவது சிறந்தது.

கருவிப்பட்டைகளை நீக்குவது பற்றி அலெக்ஸா மதிப்பை அதிகரிக்கும் டூல்பார் என்றபதிவில் கூறியிருந்தேன். அதனை இங்கு மீள்பகிர்வு செய்கிறேன்.


ஃபயர்பாக்ஸில் நீக்குவதற்கு:

Tools ==> Add-ons சென்று, அங்கு Extensions என்ற பகுதிக்கு சென்றால் நிறுவப்பட்டுள்ள கருவிப்பட்டைகள் இருக்கும். அங்கு Uninstall என்பதை சொடுக்கி நீக்கிக் கொள்ளலாம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரில் நீக்குவதற்கு:

Tools ==> Manage Add-ons என்பதை க்ளிக் செய்து, அங்கு Toolbars and extensions என்ற பகுதிக்கு சென்றால் நிறுவப்பட்டுள்ள கருவிப்பட்டைகள் இருக்கும். அங்கு Uninstall என்பதை சொடுக்கி நீக்கிக் கொள்ளலாம்.

கூகிள் க்ரோமில் நீக்குவதற்கு:

Setting என்ற விசையை அழுத்தி, Tools => Extensions என்ற பகுதிக்கு சென்றால் நிறுவப்பட்டுள்ள கருவிப்பட்டைகள் இருக்கும். அங்கு Uninstall என்பதை சொடுக்கி நீக்கிக் கொள்ளலாம்.


4. இணையத்தில் உலவும்போது அடிக்கடி உங்கள் உலவியின் நினைவிகளை (Cookies) அழித்துவிடுங்கள். குறிப்பாக பொதுக் கணினிகளை பயன்படுத்தும் போது இதனை செய்ய மறக்காதீர்கள்.

நினைவிகளை (Cookies) பற்றி முழுதும் தெரிந்துக் கொள்ள: குக்கீஸ் - 1, குக்கீஸ் - 2

நினைவிகளை நீக்க:

Firefox => options => Privacy (Tab) => Remove Individual Cookies > Remove All Cookies

Internet Explorer => Internet Options => General (Tab) => Delete (under Browsing History)

Google Chrome => Options => Under the Hood => Clear Browsing Data

5. மின்னஞ்சல், பண பரிமாற்றம் போன்ற தளங்களை பயன்படுத்தும் போது அதன் முகவரியை பார்க்கவும். https:// என்று இருந்தால் மட்டுமே பயன்படுத்தவும். வெறும் http:// என்று இருந்தால் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் https என்பது மறையாக்கம் (Encrypt) செய்யப்பட முறையாகும். இதன் மூலம் நாம் அனுப்பும் தகவல்களை மற்றவர்கள் (ஹேக்கர்கள்) தெரிந்துக் கொள்ள முடியாது.

6. மின்னஞ்சல்களில் வரும் தேவையில்லாத சுட்டிகளை தவிர்த்துவிடுங்கள். அந்த தளங்களில் செல்வதன் மூலம் வைரஸ், மால்வேர்கள் வரலாம்.

7. இணையத்தில் எண்ணற்ற இலவச மென்பொருள்கள் கிடைக்கின்றன. அவற்றை பயன்படுத்தும் முன் கவனம் தேவை. அதிகமான மென்பொருள்களுடன் வைரஸ், மால்வேர்கள் இருக்கின்றன. இவைகள் உங்கள் தகவல்களை உங்களுக்கு தெரியாமலேயே மென்பொருளை உருவாக்கியவருக்கு அனுப்புகின்றன.

8. இவைகள் எல்லாவற்றையும் விட நல்லதொரு ஆன்டி-வைரஸ் மென்பொருளை பயன்படுத்துவது முதன்மையான பாதுகாப்பாகும். மேலும் அதனை அடிக்கடி மேம்படுத்துங்கள். (நான் பயன்படுத்தும் அவிரா ஆன்டி-வைரஸ் மென்பொருள் பற்றி இறைவன் நாடினால் பிறகு விளக்கமாக பதிவிடுகிறேன்)

இறைவன் நாடினால், தொடரும்....

இணைய பாதுகாப்பு #2 - Personal Informations


இணைய பாதுகாப்பில் நாம் அடுத்து பார்க்கவிருப்பது தனிப்பட்ட தகவல்கள் (Personal Informations).
இணையத்தில் நமது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதின் மூலம் நம்முடைய ஆபத்திற்கு நாமே பாதை அமைக்கிறோம். நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது பற்றி இங்கு பார்ப்போம்.

இணையத்தை பொறுத்தவரை எதுவும் இலவசமில்லை என்பதை நாம் நன்றாக தெரிந்துக் கொள்ளவேண்டும். இலவசமாக நாம் பெறும் (கிட்டத்தட்ட) அனைத்து வசதிகளுக்கும் நாம் நம்முடைய தகவல்களை தாரைவார்க்கிறோம். மேலும் இணையத்தில் ஒருமுறை நமது தகவல்களை பதிந்துவிட்டால் மீண்டும் அதனை அழிப்பது மிகவும் கடினமாகும். அதனால் நமது தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது கவனமாக இருக்க வேண்டும்.

நமது தகவலை பாதுகாக்க சில வழிகள்:

1. நீங்கள் ரகசியமாக வைத்திருக்க நினைக்கும் எந்த தகவல்களையும் இணையத்தில் பதிவு செய்யாதீர்கள்.

2. சில தளங்களில் இணைவதற்கு கணக்கு ஒன்று பதிவு செய்தால் தான் இணைய முடியும் அல்லது மேலதிக வசதிகளை பெற முடியும். அப்படி பதிவு செய்யும்போது சில தகல்களை கொடுத்தால் மட்டும் போதுமானதாக இருக்கும். அவற்றில் * என்ற குறியீடு இருக்கும். அப்படி இருக்கும் போது, அதனை மட்டும் பூர்ர்த்தி செய்யுங்கள். மேலதிக தகவல்களை கொடுக்காதீர்கள்.

3. உங்களுக்கு நம்பிக்கை இல்லாத தளங்களில் கணக்கு தொடங்கும்போது உங்களது உண்மையான தொலைபேசி எண், வீட்டு முகவரி, பின்கோட் போன்றவற்றை கொடுக்காதீர்கள்.

4. இணையம் மூலம் பழக்கமான முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் சொந்தப் பிரச்சனைகளையும், தொடர்பு முகவரிகளையும் பகிரும் போது கவனம் தேவை.

5. பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் தேவையில்லாத அப்ளிகேசன்ஸ் மற்றும் விளையாட்டுக்களை பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்துவதால் பேஸ்புக்கில் இருக்கும் உங்கள் விவரங்கள அனைத்தையும் அவர்களுக்கு தெரிவிக்கிறீர்கள்.

6. சில நேரங்களில் உங்கள் நண்பர்களிடமிருந்து சுட்டியுடன் கூடிய மின்னஞ்சல்கள் வரும். ஆனால் அந்த மின்னஞ்சல்களை உண்மையிலேயே உங்கள் நண்பர் அனுப்பியிருக்க மாட்டார். அவர் பயன்படுத்தும் மென்பொருள்கள் ஏதாவது அனுப்பியிருக்கும். அவைகள் எரித (Spam) மின்னஞ்சல்கள் ஆகும். அதனை உடனே அழித்துவிடுங்கள்.

7. சமூக வலைப்பின்னல் தளங்களில் நமது தனிப்பட்ட தகவல்களை பகிரும் போது முடிந்தவரை பொதுவில் பகிராமல் நண்பர்களுக்கு மட்டும் பகிரவும்.

8. சமூக வலைப்பின்னல் தளங்களில் உங்களுக்கு அறிமுகமில்லாதவர்களை நண்பர்களாக இணைக்க வேண்டாம்.

நம்முடைய தகவல்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்:
1. இணையதளங்களில் சேரும் போது உங்கள் தனிப்பட்ட தகவல்களை கொடுப்பதால் உங்களுக்கு தனிப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை. ஆனால் நம்முடைய தகவல்களை அவர்கள் பல நிறுவனங்களுக்கு பணம் வாங்கிக் கொண்டு விற்றுவிடுகிரார்கள். இதன் மூலம் அந்த நிறுவனங்கள் நமது மின்னஞ்சல்கள், தொலைப்பேசிகள் மூலம் அவர்களின் பொருட்களை விற்பதற்கு தொல்லை தருவார்கள். உங்கள் எரித (spam) மின்னஞ்சல்களை பார்த்தாலே தெரியும். எனக்கு வரும் எரித மின்னஞ்சல்களில் சிலவற்றுக்கு காரணம், வேலைவாய்ப்பு தளங்களிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும், ப்ளாக் தொடர்பான சில ஆங்கில தளங்களிலும் என்னுடைய மின்னஞ்சல்களை பகிர்ந்தது.

2. உங்கள் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பொதுவில் பகிர்வதால் உங்களுக்கு தேவையில்லாத தொல்லைகளும், பிரச்சனைகளும் வரலாம். இவைகள் பல குற்றங்களுக்கு காரணமாக அமையலாம்.

இப்படி இன்னும் நிறைய உள்ளது. சில காரணங்களால் விரிவாக எழுத முடியவில்லை. அதனால் நமது பாதுகாப்பு நம் கையில் தான் உள்ளது எம்பதை உணர்ந்து, நமது தனிப்பட்ட தகவல்களில் கவனமாக இருப்போம்.

இணைய பாதுகாப்பு #1 - Passwords


கணினி பயன்படுத்துபவர்களில் அதிகமானோர் இணையத்தை பயன்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். அந்தளவு இணையத்தின் வளர்ச்சி அபாரமானது. எந்த இணையம் நமக்கு அதிகம் உதவுகிறதோ, அதே இணையம் தான் நமக்கு அதிகமான ஆபத்தையும் விளைவிக்கின்றது. அப்படிப்பட்ட இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்.

இது தொடர்பாக ஏற்கனவே சைபர் க்ரைம் - ஒரு பார்வை , ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் ஆகிய பதிவுகளில் ஓரளவு பார்த்திருந்தாலும், ஒவ்வொன்றை பற்றியும் கொஞ்சம் விரிவாக, தொடர்ந்து பார்ப்போம்.

நம்முடைய இணைய கணக்குகளை நாம் மட்டுமே அணுகுவதற்கு பயன்படுவது கடவுச்சொல்( Password). இணையத்திருடர்கள் நம் கணக்கை திருடுவதற்கு அவர்கள் குறி வைப்பது நம்முடைய பாஸ்வேர்டை தான். அதனை பாதுகாப்பது பற்றி கொஞ்சம் இங்கு பார்ப்போம்.

1. முதலில் உங்கள் கடவுச்சொல் எளிதில் யூகிக்க முடியாதவையாகவும், கடினமாகவும் இருக்க வேண்டும்.

2. உங்களுக்கு பிடித்தவர்களின் பெயர்கள், தொலைபேசி எண், மொபைல் நம்பர், பிறந்த நாள் இவைகளை பாஸ்வேர்டாக வைக்க வேண்டாம். உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களால் இவைகளை எளிதில் கணிக்க முடியும்.

3. எக்காரணம் கொண்டும் உங்கள் கடவுச்சொல்லை யாரிடமும் கொடுக்காதீர்கள்.

4. முடிந்தவரை உங்கள் கடவுச்சொல்லில் எழுத்துக்கள், எண்கள் ஆகிய இரண்டையும் கலந்துக் கொடுங்கள். (உதாரணத்திற்கு abcd1234)

5. டிக்சனரியில் உள்ள வார்த்தைகளை கடவுச்சொல்லாக வைக்காதீர்கள். ஏனெனில் அவ்வாறான கடவுச்சொற்களை கண்டுபிடிப்பதற்காக அகராதி தாக்குதல் (Dictionary Attack) என்னும் தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் பயன்படுத்துகிறார்கள்.

6. எல்லா தளங்களுக்கும் ஒரே கடவுச்சொல்லை பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.

7. உங்கள் கடவுச்சொற்களை எங்கும் எழுதி வைக்காதீர்கள். அப்படி எழுதி வைத்தால் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்.

8. நீங்கள் கடவுச்சொல்லைக் கொடுக்கும் போது யாரும் பார்க்காதவாறு கொடுங்கள்.

9. முக்கியமாக உங்கள் நினைவில் இருக்கக் கூடிய சொல்லாக வையுங்கள்.

10. ப்ரவ்சிங் சென்டர்களில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஏனெனில் அவைகளில் Keystroke Logging மென்பொருள்கள் இருக்கலாம். இதன் மூலம் நீங்கள் கீபோர்டில் டைப் செய்யும் அனைத்தையும் அவர்கள் அறிந்துக்கொள்ள முடியும். On-Screen Keyboard எனப்படும் திரை விசைப்பலகை மூலம் டைப் செய்தாலும் அந்த மென்பொருள்கள் மூலம் பதிவு செய்யப்படும்.


உதாரணத்திற்கு, ஒரு மெயில்:

இதன் தகவல்களை keystroke Logging மென்பொருள் மூலம் எடுக்கப்பட்டவை:

mage Credit: Wikipedia

இவற்றிலிருந்து நமது கடவுச்சொல்லை பாதுகாக்க, கடவுச்சொல்லை கொடுக்கும் போது அதற்கு முன்பும், இடையிலும் மேலும் சில எழுத்துக்களை சேர்த்து, அவற்றை மவுஸ் மூலம் நீக்கிவிடுங்கள். இது ஓரளவு பாதுகாக்கும்.


11. மொபைல்களில் சாட்டிங் செய்யும் வசதியை அளிக்கும் மூன்றாம் நபர் மென்பொருள்களை (Third Party Applications) பயன்படுத்தாதீர்கள். அவைகள் உங்கள் மின்னஞ்சல்கள் மூலம் உங்கள் கணக்கில் உள்ள அனைத்து நபர்களின் மின்னஞ்சல்களுக்கும் ஸ்பாம் மெயில்களை அனுப்புகின்றன.


இறைவன் நாடினால் தொடரும்.....

சைபர் க்ரைம் - ஒரு பார்வை



இணையம் ஒரு விசித்திரம். ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் மூலம் இனிய முகங்களை காட்டி நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன. இன்னொரு பக்கம் ஹேக்கிங், ஸ்பாம், ஆபாசம் போன்ற வக்கிர முகங்களை காட்டி நம்மை துன்பத்தில் ஆழ்த்துகின்றன. சைபர் க்ரைம் எனப்படும் இணைய குற்றங்களை பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும் சிறிதளவு இங்கு பார்ப்போம்.

இணைய குற்றங்கள் (Cyber Crimes):

1. ஸ்பாம்(Spam) எனப்படும் தேவையில்லாத மெயில்கள். இவற்றை பற்றி ஈமெயில் ஐடியை பாதுகாக்க சில வழிகள் என்ற பதிவில் பார்த்தோம்.

2. கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் இணையத்தில் பணபரிமாற்றங்கள் நடக்கும்பொழுது, கடவுச்சொல் உள்பட கணக்கு விவரங்களை திருடுவது.

3. பாலியல் ரீதியான தொல்லைகள் . சாட்டிங்கில் ஆரம்பித்து டேட்டிங்கில் முடிகிறது இன்றைக்கு சில இணைய நட்புகள். அதுமட்டுமின்றி காதலன் என்ற பெயரில் வக்கிர வெறிபிடித்த கயவர்கள் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிடுகிறார்கள். மேலும் அதனைக் கொண்டே பெண்களை மிரட்டி வருகிறார்கள்.

4. போதை பொருள் விற்பனை. தடைசெய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்வதற்கும் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

5. இணையதளங்களை ஹேக் செய்வது. ஹேக்கர்களிடமிருந்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வும் தப்பவில்லை, மின்னணு சாதனங்களில் ஜாம்பவனாக திகழும் சோனி(Sony)யும் தப்பவில்லை. சமீப காலமாக பல தளங்கள் ஹேக் செய்யப்படுகின்றது.

6. இருபது வயதுக்குட்பட்டவர்களுக்கு அல்லது இருபது வயதுக்குட்பட்டவர்களின் ஆபாச புகைப்படங்கள், படங்கள் இன்னும் சிலவற்றை இணையத்தில் பதிவது. [ஒன்றுமட்டும் புரியவில்லை. அது போன்ற ஆபாச தளங்களுக்கு சென்றால் கேள்வி கேட்கும். நீங்கள் இருபது வயதுக்குட்பட்டவரா? இல்லையா? என்று. சிறுவர்களும் "ஆம்" என்பதை க்ளிக் செய்தால் எளிதாக அந்த தளங்களை பார்க்கலாம். இது எப்படி இருக்கிறது என்றால், சிகரெட் பாக்கெட்டில் மண்டை ஓடு படத்தை போடுவது போல தான். ஆபாச தளங்களை முழுமையாக தடை செய்வதே இதற்கு சரியான தீர்வாகும்.]

7. இவற்றைவிட கொடியது, குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல்கள். மனித உருவில் பல மிருகங்களும் நம்முடன் வாழத்தான் செய்கின்றன. இவர்கள் சிறுவர், சிறுமிகள் உரையாடும் அரட்டை அறைகளுக்கு(Chatting) சென்று தங்களை குழந்தைகளாகவே அறிமுகம் செய்கின்றனர். பிறகு அவர்களின் புகைப்படங்கள், வீட்டு முகவரி, பள்ளி முகவரி என தகவல்களை பகிர்கின்றனர். இது போன்ற கேடு கெட்டவர்கள் ஒரு அமைப்பாகவே செயல்படுகின்றனர். தங்களுக்குள் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், தகவல்களையும் பகிர்ந்துக் கொள்கின்றனர்.

பாதுகாப்பு வழிகள்:
1. எந்த நிலையிலும் முகம் தெரியாத நபர்களிடம் உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, பள்ளி முகவரி போன்றவற்றை பகிர வேண்டாம்.

2. ஃபேஸ்புக் போன்ற சமூக தளங்களில் அறிமுகம் அல்லாதவர்களை நண்பர்களாக சேர்க்க வேண்டாம்.

3. குழந்தைகள் தனி அறையில் இணையத்தில் உலவுவதை அனுமதிக்காதீர்கள். குழந்தைகள் பயன்படுத்தும் கணினிகளை பொதுவான இடத்தில் வைப்பது நலம்.

4. இணையம் பற்றியும் பாதுகாப்பு வழிகள் பற்றியும் உங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுங்கள். கணினி பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்பதை கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் இணையத்தில் சிறிது நேரம் செலவிடுங்கள். அதிகமான குழந்தைகள் வழிமாறி செல்வதற்கு சரியான அரவணைப்பு இல்லாதே காரணம் என நான் கருதுகிறேன்.

5. உங்கள் குழந்தைகள் பார்வையிடும் வலைத்தளங்களை கண்காணியுங்கள். நீங்கள் செல்லும் போது குழந்தைகள்அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வலைத்தளத்தை மூடினால், உடனே கவனிக்கவும்.

6. அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களை நேரில் சந்திக்க அழைத்தால் மறுத்துவிடுங்கள்.

7. நீங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பதை அவர்கள் பதிவு செய்யக் கூடும் என்பதை மறவாதீர்கள்.

8. அறிமுகம் இல்லாதவர்களுடன் முகம் பார்த்து அரட்டை அடிக்கும் வீடியோ சாட்டிங்கை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் பதிவு செய்யப்பட்டு, உங்களுக்கு தெரியாமலே இணையத்தில் பரப்பப்படலாம்.

9. இணையத்தில் உங்களை பற்றிய முழு விவரங்களையும் பகிர வேண்டாம். முக்கியமாக ஃபேஸ்புக்கில்.

10. குழந்தைகள், பெண்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்கவும். தற்போது உள்ள தொழில்நுட்பங்கள் மூலம் அந்த புகைப்படங்களை ஆபாசமாக மாற்றலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

11. உங்கள் password-ஐ பெற்றோர்களை தவிர வேறு யாரிடமும் தெரிவிக்க வேண்டாம்.

12. பணபரிமாற்றங்கள் செய்யும் பொழுது அந்த பக்கத்தின் முகவரியை பாருங்கள். http::// என இருந்தால் உங்கள் கார்ட் விவரங்களை கொடுக்காதீர்கள். https:// என்று இருந்தால் மட்டுமே பணப்பரிமாற்றம் செய்யுங்கள். https::// என்பது பாதுகாப்பான வழியாகும்.

13. காதலன் என்றாலும் உங்களை படம்பிடிப்பதை அனுமதிக்காதீர்கள்.

பிரச்சனை பெரிதாக ஆனால் ஃசைபர் க்ரைமில் புகார் செய்யலாம். புகார் செய்யும் முன் வக்கீல்களிடம் ஆலோசனை பெறவும்.

சைபர் க்ரைமில் ஏற்றுக்கொள்ளப்படும் புகார்கள்:
1. இண்டர்நெட் கடவுச்சொல் திருட்டு

2. அச்சுறுத்தும் மின்னஞ்சல்கள்

3. இணைய பின்தொடர்தல் (Cyber Stalking) [பாலியல் ரீதியிலான தொல்லைகள், வேறொருவர் உங்களை போல இணையத்தில் உலவுவது, மிரட்டல்கள் ஆகியவைகளும் அடங்கும்].

4. குழந்தைகள் வன்கொடுமை / ஆபாச தளங்கள்

5. கடன் அட்டை எண் திருட்டு

6. வலைத்தள ஹேக்கிங்

தமிழ்நாட்டில் புகார் கொடுக்க:


சென்னை தவிர பிற மாவட்டங்கள்:
Tmt.Sonal V.Misra, IPS,
SCB, Cyber Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

மின்னஞ்சல் முகவரி: spcybercbcid.tnpol(at)nic.in

சென்னை:
Tr.S.Aravind,
DSP, CBCID, Cyber Crime Cell
SIDCO Electronics Complex,
Block No. 3, First Floor,
Guindy Industrial Estate,
Chennai -32

தொலை பேசி எண்: 044-22502512
மின்னஞ்சல் முகவரி: cbcyber (at) nic.in